“பெங்களூரு போன்ற பெரிய நகரத்தில்...” - பாலியல் வன்கொடுமை குறித்த கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

ஜி பரமேஸ்வரா | கோப்புப் படம்
ஜி பரமேஸ்வரா | கோப்புப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் பாலியல் சம்பவங்கள் அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூருவில் பாரதி லே அவுட் பகுதியில் கடந்த 3-ம் தேதி அதிகாலை 2 பெண்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகியதை அடுத்து, வீதியில் நடப்பதற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை பெங்களூருவில் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, "பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் இங்கும் அங்குமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் போதெல்லாம் அது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

விழிப்புடன் இருக்குமாறும், ரோந்துப் பணிகளை தொடர்ந்து பின்பற்றுமாறும், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் பெங்களூரு காவல் ஆணையர் தயானந்தாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மழை மற்றும் குளிரைப் பொருட்படுத்தாமல் போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதனால்தான் பெங்களூருவில் அமைதி நிலவுகிறது" என்று கூறினார்.

அமைச்சர் பரமேஸ்வராவின் இந்த பதில், சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்துவதுபோல அமைச்சரே பேசலாமா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கு முன், பெங்களூருவில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாநில முதல்வர் சித்தராமையா, “பாஜக ஆட்சிக் காலத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கவில்லையா? பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கக்கூடாது, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஆனால் சமூகத்தில் எப்போதும் கெட்டவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

முதல்வரின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ அஸ்வத் நாராயண், இதை வெட்கக்கேடான நியாயப்படுத்தல் என்று விமர்சித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in