

புதுடெல்லி: இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு இங்கிலாந்தின் பிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்தின் வேமவுத் நகரில் ‘சாண்ட்வேர்ல்டு 2025’ என்ற பெயரில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா நடைபெறுகிறது. இதில், இந்தியாவின் புகழ் பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு பிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது மற்றும் பதக்கத்தை வேமவுத் மேயர் ஜோன் ஓரல் வழங்கினார். இதன் மூலம் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறும்போது, “தெற்கு இங்கிலாந்து கடற்கரையில், உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் 10 அடி நீளத்தில் விநாயகர் சிற்பத்தை மணலில் வடிவமைத்ததற்காக எனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்” என்றார்.
பத்மஸ்ரீ வருது பெற்றவரான பட்நாயக், 65-க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் சிற்ப சாம்பியன் போட்டி மற்றும் திருவிழாக்களில் பங்கேற்றுள்ளார். இங்கிலாந்து மணல் சிற்பக் கலையின் தந்தையாக கருதப்படும் பிரெட் டாரிங்டன் நினைவாக இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.