

கொழும்பு: இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய ‘இலங்கை மித்ர விபூஷண்' விருதை அதிபர் அனுர குமார திசாநாயக்க வழங்கி கவுரவித்தார். மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என இரு தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தாய்லாந்தில் நடந்த ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நேற்றுமுன்தினம் இரவு இலங்கைக்கு சென்றார். இலங்கை அரசின் 6 மூத்த அமைச்சர்கள் கொழும்பு விமான நிலையத்துக்கு வந்து, அவரை வரவேற்றனர். தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் விமான நிலையத்தில் திரண்டு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு நேற்று பீரங்கி குண்டுகள் முழங்க, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அதிபர் மாளிகையில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், துறை செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.அப்போது இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, சுகாதாரம், மருந்து உற்பத்தி, மின் விநியோகம், டிஜிட்டல் தீர்வுகள், கிழக்கு மாகாணத்துக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திருகோணமலையில் அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் இடையே முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இலங்கை முழுவதும் உள்ள 5,000 வழிபாட்டு தலங்களில் சூரிய மின் உற்பத்திக்கான தகடுகளை வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இலங்கையை சேர்ந்த 700 பேருக்கு இந்தியா சார்பில் ஆண்டுதோறும் திறன்சார் பயிற்சி அளிக்கப்படும். திருகோணமலை திருக்கோணேஸ்வரம் சிவன் கோயில், நுவரெலியாவில் சீதா எலியா கோயில், அனுராதபுரத்தில் புனித நகர வளாகத் திட்டம் ஆகியவற்றுக்கு இந்தியா நன்கொடை வழங்கும் என்றும் அறிவித்தார்.
இதன் பின்னர், இலங்கை அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய ‘இலங்கை மித்ர விபூஷண்’ விருதை அதிபர் அனுர குமார திசாநாயக்க வழங்கினார். ‘இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு கிடைத்த மரியாதை’என வலைதளத்தில் தமிழ், ஆங்கிலத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
கொழும்பில் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: பிரதமர் மோடி: இலங்கை வளர்ச்சி அடைய வேண்டும், வலுப்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான வட்டியை குறைத்துள்ளோம். பல வகையில் மானியங்கள் வழங்கியுள்ளோம். கிழக்கு பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்காக ரூ.2,400 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியா சார்பில் இலங்கை தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணி விரைவில் நிறைவடையும். மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்து பேச்சு
வார்த்தை நடத்தப்பட்டது. இந்த பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். படகுகளை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதிபர் திசாநாயக்க: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துக்கு இலங்கை பகுதியைபயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம். இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டத்துக்காக ரூ.300 கோடி வழங்கிய இந்தியாவுக்கு நன்றி.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ் தேசிய தலைவர்கள் சந்திப்பு: இலங்கையின் தமிழ் தேசிய தலைவர்கள் ஸ்ரீதரன், கஜேந்திர குமார், பொன்னம்பலம், ராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம், சுமந்திரன், சித்தார்த்தன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழ் சமுதாயத்துக்கு சமஉரிமை, கண்ணியமான வாழ்க்கை, நீதி கிடைக்க வேண்டும். எனது பயணத்தின்போது பல்வேறு சமூக, பொருளாதார திட்டங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழ் சமூகத்துக்கு பலன் அளிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி: பிரதமர் மோடியும், அதிபர் திசாநாயக்கவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு’ என்ற திருக்குறளை கூறிய மோடி அதற்கான விளக்கத்தையும் எடுத்துரைத்தார்.
‘‘எதிரிகளை எதிர்கொள்ள நல்ல நண்பன் மற்றும் நல்ல நட்பை தவிர, பாதுகாப்பு அரணாக வேறு என்ன இருக்க முடியும்’’ என்று அவர் தெரிவித்தார். தீவிரவாத தாக்குதல், கரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி காலங்களில் இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது. இதை நினைவுபடுத்தும் வகையில் திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார்.