கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட கணவர்: மனைவி உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பரபரப்பு

கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட கணவர்: மனைவி உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பரபரப்பு
Updated on
2 min read

கர்நாடகாவில் மனைவியை கொன்றதாக கணவர் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மனைவி உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குஷால் நகரை சேர்ந்தவர் குருபர‌ சுரேஷ் (38). விவசாய கூலியான இவர் தனது மனைவி மல்லிகெ (32) உடன் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு குருபர சுரேஷ் தனது மனைவியை காணவில்லை என குருபர‌ சுரேஷ் குஷால் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, 2021-ம் ஆண்டு மைசூரு மாவட்டத்தில் உள்ள பெட்டதபுரா அருகே காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீஸார் அந்த உடல் காணாமல் போன ம‌ல்லிகெவின் உடல் என உறுதி செய்தனர். இதையடுத்து குருபர சுரேஷ் தனது மனைவி மல்லிகெவை கொன்று ஆற்றில் போட்டதாக போலீஸார் அவரை கைது செய்தனர். அவரை அடித்து சித்ரவதை செய்து, வாக்குமூலமும் வாங்கினர்.

இவ்வழக்கில் 2022-ம் ஆண்டு மைசூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். குருபர சுரேஷ் மைசூரு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸார் கைப்பற்றிய பெண்ணின் உடலை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதில் ஆற்றில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மல்லிகெவுடையது அல்ல என தெரியவந்தது. இதனையடுத்து குருபர சுரேஷ் கடந்த ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இவ்வழக்கில் திடீர் திருப்பமாக குருபர சுரேஷ் தனது மனைவி மல்லிகெவை மடிகேரியில் உள்ள ஒரு உணவகத்தில் பார்த்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து, போலீஸாருக்கு ஆதாரத்துடன் அனுப்பியுள்ளார். இருப்பினும் போலீஸார் அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த நேற்று முன்தினம் இவ்வழக்கு மைசூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது குருபர சுரேஷ் சார்பில், கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட மல்லிகெவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது காணாமல் போன மல்லிகெ தன‌து காதலனுடன் வாழ்ந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி குருராஜ் சோமக்களவர், ''இவ்வழக்கை விசாரித்த போலீஸார் மிகவும் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ள‌னர். போலீஸாரின் தவறுகளை எளிதாக கடந்துவிட முடியாது. இந்த வழக்கில் மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரும் 17-ம் தேதிக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்''என உத்தரவிட்டது.

இதுகுறித்து குருபர சுரேஷ் கூறுகையில், ''இந்த வழக்கினால் நான் கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன். போலீஸார் என்னை அடித்து வாக்குமூலம் வாங்கினர். இந்த வழக்கை தவறான முறையில் விசாரித்த போலீஸாருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in