‘இருதரப்பு உறவை பாதிக்கும் சொற்களைத் தவிர்ப்பீர்!’ - முகமது யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

‘இருதரப்பு உறவை பாதிக்கும் சொற்களைத் தவிர்ப்பீர்!’ - முகமது யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

பாங்காக்: இருதரப்பு உறவை பாதிக்கும் சொற்களைத் தவிர்க்குமாறு, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பிரதமர் மோடி வலியுறுத்தியதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, உச்சிமாநாட்டின் இடையே வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தேன். வங்கதேசத்துடன் ஆக்கபூர்வமான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட உறவுக்கு இந்தியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

வங்கதேசத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்துக்கான இந்தியாவின் ஆதரவை நான் மீண்டும் வலியுறுத்தினேன். சட்டவிரோதமாக எல்லை தாண்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தேன். மேலும், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான எங்கள் தீவிர கவலையை வெளிப்படுத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த சந்திப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “நிலையான, அமைதியான, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்துக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை இந்தியா நம்புகிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு நீண்ட காலமாக இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான நன்மைகளை வழங்கியுள்ளது என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த உணர்வின் அடிப்படையில் வங்கதேசத்துடன் ஆக்கபூர்வமான உறவை உருவாக்க இந்தியா விரும்புகிறது என்பதை அவர் (மோடி) அடிக்கோடிட்டுக் காட்டினார். சுமூக சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சொல்லாட்சியையும் தவிர்ப்பது நல்லது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எல்லையில் சட்டத்தின் கடுமையான அமலாக்கம் அவசியம் என்பதையும், சட்டவிரோதமாக எல்லை தாண்டுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பொருத்தமான நேரத்தில் கூடி நமது உறவுகளை மறுபரிசீலனை செய்து முன்னோக்கி எடுத்துச் செல்லலாம் என்றும் பிரதமர் கூறினார்.

இந்துக்கள் உட்பட வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கவலைகளை மோடி வலியுறுத்தினார். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் அட்டூழியங்கள் தொடர்பான வழக்குகளை முழுமையாக விசாரிப்பதன் மூலம் வங்கதேச அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.

ஷேக் ஹசீனா பிரச்சினையை முகமது யூனுஸ் எழுப்பினார். அவர் வெளியிடும் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் குறித்தும், கங்கை நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் மற்றும் டீஸ்டா ஒப்பந்தம் ஆகியவை குறித்தும் முகமது யூனுஸ் எழுப்பினார்" என தெரிவித்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், முகமது யூனுஸை பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in