‘வக்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடரும்’ - ஜெய்ராம் ரமேஷ்

‘வக்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடரும்’ - ஜெய்ராம் ரமேஷ்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்தம்) மசோதாவை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிஏஏ- 2019 மீது இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றதால் விசாரிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மீது 2019 மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து வழக்கு, தேர்தல் நடத்தை விதிகள் (2024) திருத்தங்களின் செல்லுபடித்தன்மை குறித்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 ஷரத்துக்கள் மற்றும் உணர்வுகளை பாதுகாக்க வேண்டிய காங்கிரஸின் தலையீடு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதேபோல், வக்பு (திருத்தம்) மசோதாவையும் எதிர்த்து விரைவில் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.

இந்திய அரசியலமைப்பு கொள்கைகள், நடைமுறைகள், மற்றும் செயல்பாடுகள் மீதான மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

வக்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் வியாழக்கிழமை வக்பு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஆளும் பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 37 பேர் விவாதத்தில் பங்கேற்று பேசினர். நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது.

12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த விவாதத்தைத் தொடர்ந்து மின்னணு முறையில் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்ததாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மேஜையை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in