

புதுடெல்லி: தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க கோரி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விஷ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவரும், பாஜகவின் முன்னாள் எம்பியுமான துறவி சாத்வீ பிராச்சி கோரிக்கைவிடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத்தை சேர்ந்தவர் பெண் துறவியான சாத்வீ பிராச்சி. தம் இளம் வயதில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கில் (ஆர்எஸ்எஸ்) இணைந்து பெண்களுக்கானப் பயிற்சியாளராக இருந்தார். பிறகு ராமர் கோயில் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரிவுகளில் ஒன்றான விஷ்வ இந்து பரிஷத்தில் (விஎச்பி) இணைந்தார். அப்போது தனது அதிரடியான கருத்துகளால் பிரபலமானார். இதனால், அவர் ஆர்எஸ்எஸ் அரசியல் பிரிவான பாஜகவின் உபியின் மக்களவை தொகுதி எம்பியாகவும் இருந்தார்.
தற்போது அவர், உத்தராகண்டின் ஹரித்துவாரிக் தன் வேதிக் நிகேதன் ஆசிரமத்தில் இருந்து வருகிறார். இங்கு நேற்று செய்தியாளர்களை சந்தித்த துறவி பிராச்சி, “பெண்களை போல் ஆண்களுக்கும் ஒரு தேசிய ஆணையம் அவசியம். ஒருபுறம், நாட்டில் மனைவிகளால் துன்புறுத்தப்படும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, பெண்களை விட ஆண்கள் மீதான ஒடுக்குமுறை அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்தச் சூழ்நிலையில், நாட்டிற்கு மகளிர் ஆணையம் போன்ற ஒரு ஆண்கள் ஆணையம் தேவை. இதனால், ஆண்களின் பாதுகாப்பிற்கும் தேசிய அளவில் ஓர் ஆணையம் அவசியம். இதற்காக நான், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
முன்னதாக, பெண்கள் துன்புறுத்தப்பட்ட நிலையால், தேசிய மகளிர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அதிலிருந்து பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைத்து வருகிறது. இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்கள் துன்புறுத்தப்படுவதும் கொல்லப்படும் வெளிச்சத்திற்கு வருகின்றன. இனி, ஆண்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க ஆண்கள் ஆணையத்தை அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோல், நாட்டில் தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வேறுபல வகைகளில் எழத் துவங்கி உள்ளது. இந்தக் கோரிக்கை தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் மகேஷ் குமார் திவாரி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட திருமணமான ஆண்கள் தற்கொலை போன்ற வழக்குகளைக் கையாள்வதற்கான வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்தியாவில் விபத்து மரணங்கள் குறித்து 2021 இல் வெளியிடப்பட்ட தேசிய குற்றப் பதிவேடு மையத்தின் தரவுகளை அவர் தம் மனுவில் மேற்கோள் காட்டியிருந்தார். நாடு முழுவதும் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதில், 81,063 பேர் திருமணமான ஆண்கள் மற்றும் 28,680 பேர் திருமணமான பெண்கள். 2021 ஆம் ஆண்டில், சுமார் 33.2 சதவீத ஆண்கள் குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவும், 4.8 சதவீதம் பேர் திருமணம் தொடர்பான காரணங்களாலும் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.