Published : 06 Jul 2018 08:42 AM
Last Updated : 06 Jul 2018 08:42 AM

நேர்மையான, திறமையுள்ள நிர்வாகத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரில் அமைதி, வளர்ச்சி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேர்மையான நிர்வாகத்தின் மூலம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்படும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் வந்தார். ஆளுநர் என்.என்.வோரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மாநில அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனான உயர்மட்டக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். காஷ்மீர் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து அவர் ஆய்வு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

வளர்ச்சி அடைந்த மற்றும் செழிப்பான ஜம்மு காஷ்மீர் என்பதுதான் எங்கள் கனவு. மாநிலத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுவிட்டால், அந்தக் கனவு நனவாகும். எனவே, நேர்மையான, திறமையான, செயல்திறனுள்ள சிறந்த நிர்வாகத்தின் மூலம் மாநிலத்தில் அமைதியை கொண்டு வருவதுதான் எங்கள் கனவு.

இதுவரை காஷ்மீரில் வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் நல்ல முறையில் அமையவில்லை. எனவே, தற்போது மாநில நிர்வாகத்தில் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கைப் பிறக்கும் வகையில் அந்த நடவடிக்கைகள் இருக்கும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

காஷ்மீரில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால், கடந்த ஜூன் 20-ம் தேதி மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

நிர்வாகக் குழு அழைப்பு

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதால், மாநில நிர்வாகக் கவுன்சில் (எஸ்ஏசி) உருவாக்கப்பட்டது. இது கேபினட் அந்தஸ்துக்கு நிகரானது. ஆளுநர் என்.என்.வோரா தலைமையில் இந்தக் கவுன்சில் செயல்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீர் நிர்வாக செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, ‘‘மாநில நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டி ஆளுநர் என்.என்.வோரா ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வளர்ச்சிப் பணிகளைக் கண்காணிக்கவும், பெரிய திட்டங்களை கண்டறியவும் அர்ப்பணிப்புள்ள குழுக்களை நியமிக்கும்படி தலைமை செயலருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். வெளிப் படையான நிர்வாகத்தை வலியுறுத்தினார்’’ என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x