

டெஹராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் அவுரங்கசீப்பூரின் பெயர் இனி சிவாஜி நகராக மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள 2 சாலைகள் மற்றும் 13 தொகுதிகளில் உள்ள பெயர்கள் மாற்றப்படுகின்றன. இதில், ஹரித்துவாரில் 8, டெஹராடூனில் 4, நைனிடாலில் 2 மற்றும் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் ஒன்று ஆகியவை அடங்கும். இந்த இடங்களின் பெயர் மாற்றப்பட்டு மக்களின் உணர்வு, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மாபெரும் பங்களிப்பை வழங்கிய ஆளுமைகளிடமிருந்து மக்கள் உத்வேகத்தை பெற முடியும்.
அரசின் பரிந்துரைகளின்படி, பகவான்பூர் தொகுதியில் உள்ள ஹரித்துவார் மாவட்டத்தின் அவுரங்கசீப்பூர் இனி சிவாஜி நகர் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. பஹத்ராபாத் தொகுதியில் காஜ்வாலி மற்றும் சந்த்பூர் நகரங்கள் இனி முறையே ஆர்யா நகர் மற்றும் ஜோதிபா புலே நகர் என்று அழைக்கப்படும்.
அதேபோன்று நர்ஸன் தொகுதியின் முகமத்பூர் ஜாட் மற்றும் கான்பூர் குர்ஸ்லி ஆகியவை முறையே மோகன்பூர் ஜாட் மற்றும் அம்பேத்கர் நகர் என்று பெயரை மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கான்பூர் தொகுதியின் இத்ரிஸ்பூர் மற்றும் கான்பூர் பகுதிகள் இனி நந்த்பூர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண்பூர் என்று அழைக்கப்படும். ரூர்க்கி தொகுதியில் உள்ள அக்பர்பூர் பஸலாபூர் இனி விஜயநகர் என்று அழைக்கப்படும்.
மேலும், டெஹராடூனில் உள்ள மியான்வாலா ராம்ஜி வாலா எனவும், அப்துல்லாபூர் தக்ஸ்நகர் எனவும் நைனிடாலில் உள்ள நவாபி சாலை இனி அடல் மார்க் எனவும், பஞ்சகி ஐடிஐ சாலை இனி குரு கோவல்கர் மார்க் என்று அழைக்கப்படும். உத்தம் சிங் நகரில் உள்ள சுல்தான்பட்டி நகர் பஞ்சாயத்து இனி கவுசல்யாபுரி என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு முதல்வர் தாமி தெரிவித்துள்ளார்.