ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி குஜராத் வைர தொழிலாளர்கள் பேரணி

ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி குஜராத் வைர தொழிலாளர்கள் பேரணி
Updated on
1 min read

சூரத்: குஜராத் மாநிலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான வைர தொழிலாளர்கள் நேற்று மாபெரும் பேரணி நடத்தினர்.

உலக அளவில் வைர தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதுகுஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். வைரத்தை நறுக்குபவர்கள், பட்டை தீட்டுபவர்கள் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த துறையை நம்பி உள்ளனர்.

இந்த நிலையில் வைர தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக தொழிலாளர்களுக்கான ஊதியம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொழிலாளர்களிடையை மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைர நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதியத்தை உயர்த்த கோரியும், நிவாரண தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கதர்காம் முதல் கபோதரா ஹிரா பாக் வரை 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வைர தொழிலாளர்கள் நேற்று மாபெரும் அமைதிப் பேரணி நடத்தினர்.

குறிப்பாக, ஊதிய உயர்வு, நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட வைர தொழிலாளர் குடும்பங்களுக்கு உதவி தொகை, வைர தொழிலாளர்களின் நலனுக்காக நல வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் 90 சதவீத வைரம் நறுக்கப்பட்டு, பட்டை தீட்டும் பணிகளில் சூரத்தில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in