விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம் முடித்துவைப்பு

விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம் முடித்துவைப்பு
Updated on
1 min read

விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதம் முடித்துவைக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி எல்லைப்பகுதியில் தொடங்கினார். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பஞ்சாப் அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் கூறும்போது, “காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஜக்ஜித் சிங்கின் போராட்டம் இன்று காலை முடித்து வைக்கப்பட்டது. அவர் தண்ணீரைப் பருகி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். மேலும் அங்கு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை கலைந்து போகச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கன்னவுரி, ஷம்பு எல்லைப் பகுதிகளில் அடைக்கப்பட்டிருந்த சாலைகள் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளன" என்றார்.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, “விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து எங்களுக்கு நன்றாகத் தெரியும். விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தற்போதைய கள நிலவரம் என்ன என்பதை பஞ்சாப், ஹரியானா அரசுகள் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யவேண்டும்.

மேலும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜக்ஜித் சிங்குக்கு மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறிய பஞ்சாப் மாநில தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in