மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
Updated on
1 min read

மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. ராம்ஜி லால் சுமனை பேச அனுமதிக்காததை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

ராஜபுத்திர அரசர் ரானா சங்காவை துரோகி என சமாஜ்வாதி எம்.பி. ராம்ஜி லால் சுமன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ராவில் உள்ள அவரது வீடு மீது கர்னி சேனா அமைப்பினர் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு ராம்ஜி லால் சுமன் எழுந்து நின்றார். அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சுமன் வீடு மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சுமன் மன்னிப்பு கோர வேண்டும் என ஆளுங்கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து கேள்வி நேரத்துக்காக நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டு கூடியதும் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு ராம்ஜி லால் சுமன் மீண்டும் எழுந்து நின்றார். அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே, திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தன்கர் வெளியேறினார்: இதற்கிடையில் மாநிலங்களவை அலுவல் ஆலோசனை குழு கூட்டம் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை என்று கூறி கூட்டத்தில் இருந்து ஜெகதீப் தன்கர் வெளியேறினார்.

இதுகுறித்து எதிர்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “வாக்காளர் அடையாள அட்டை குளறுபடி மீதான விவாதம் மற்றும் மசோதாக்களை நாடாளுமன்ற குழு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் இருந்து ஜெகதீப் தன்கர் வெளியேறினார்" என்று தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in