

4 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் ரோஸா போலீஸ் சரகத்துக்குட்பட்ட மான்பூர் சச்சாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார் (36). இவருக்கு ஸ்மிருதி (12), கீர்த்தி (9), பிரகதி (7) ஆகிய 3 மகள்களும், ரிஷப் (5) என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது 4 குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்த ராஜீவ் குமார், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் திவிவேதி கூறும்போது, “நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று காலை ராஜீவ்குமாரின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ராஜீவ்குமாரின் தந்தை, கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது 4 குழந்தைகளும், ராஜீவ்குமாரும் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு ராஜீவ்குமார் விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்துள்ளார். இதனால் ராஜீவ்குமார் அடிக்கடி கோபப்பட்டு சத்தம் போடுவாராம். இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து குழந்தைகளை ராஜீவ்குமார் கொலை செய்து இருக்கலாம் எனத் தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்.