ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.7 லட்சமா?

ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.7 லட்சமா?
Updated on
1 min read

ஆன்லைனில் நடத்தப்படும் ஏலங்களின் மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு, ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1917-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஒரு ரூபாய் நோட்டு முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 1926-ம் ஆண்டில் ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. இதன்பிறகு கடந்த 1940-ம் ஆண்டு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 1994-ம் ஆண்டில் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டில் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலேயர் காலத்தில் அச்சடிக்கப்பட்ட பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சுதந்திரத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுகள் சிலரிடம் மட்டுமே இருக்கிறது. இதனால் அந்த ரூபாய் நோட்டுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட இணையதளங்களில் ஆன்லைனில் ஏலங்கள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க, விற்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்குவது கிடையாது. எனினும் ஆன்லைனில் சட்டவிரோதமாக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சட்டப் பிரச்சினைகள் எழுந்தால் அதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in