

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று (மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3வது வாயிலில் கூடி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அனில் திவாரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தப் போராட்டம் எந்த நீதிமன்றத்துக்கும் அல்லது நீதிபதிக்கும் எதிரானது அல்ல. ஆனால், நீதித்துறை அமைப்புக்கு களங்கம் விளைவித்தவர்களுக்கு எதிரானது.
ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும், வெளிப்படைத்தன்மை இல்லாத ஒரு அமைப்புக்கு எதிராகவுமானது எங்கள் போராட்டம். இப்போதைக்கு எங்கள் கோரிக்கை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து இடமாற்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதே.
இந்த விவகாரத்தில் முழுமையான போராட்டத்திற்கு சங்கம் தயாராக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, இந்த விஷயத்தை மூடிமறைக்க முயற்சி நடந்து வருகிறது. இன்று, இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு தீர்வு எட்டப்படும் வரை, விளைவுகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் மீண்டும் பணியைத் தொடங்க மாட்டோம்.” என தெரிவித்தார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ டெல்லி இல்லத்தில் கடந்த 14ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, அங்கு சென்ற தீ அணைப்புத் துறையினர் அங்கு கட்டுக் கட்டாக எரிந்த ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு அது குறித்து காவல்துறைக்கு தெரிவித்தனர். பின்னர், காவல் துறையினர் அதனை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மூவர் குழு ஒன்றை அமைத்தது. மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த 20-ம் தேதி பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரைக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒன்றும் "குப்பைத் தொட்டி" அல்ல என்று தெரிவித்தது. மேலும், இடமாற்றம் நடந்தால், அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்றும் அச்சுறுத்தியது. இதையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யும் பரிந்துரையை கொலீஜியம் நிறுத்திவைத்தது.
இந்நிலையில், “சிறந்த நீதி நிர்வாகத்திற்காக” நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தலைநகர் டெல்லிக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நேற்று மீண்டும் கூடிய உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்தது. நீதிபதி வர்மா, ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாகி வந்தவர் என்பதால், அவரை திருப்பி அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அனைத்து நீதித்துறைப் பணிகளும் மறு உத்தரவு வரும் வரை திரும்பப் பெறப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.