Published : 25 Mar 2025 12:10 PM
Last Updated : 25 Mar 2025 12:10 PM
மும்பை: "நையாண்டியை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு" என்று தன்னைப்பற்றி குணால் கம்ரா நகைச்சுவையாக பேசிய சர்ச்சை விவகாரம் குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல் நையாண்டி கலைஞர் குணால் கம்ரா, கடந்த மாதம் மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வரும், சிவ சேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சனம் செய்திருந்தார். அவர் பேசிய வீடியோ சமீபத்தில் வெளியானது. குணாலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரது பேச்சுக்கு சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்வினை ஆற்றிருந்தனர். மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "தனது கீழ்த்தரமான நகைச்சுவைக்காக குணால் கம்ரா மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
‘இதுவா கருத்துச் சுதந்திரம்’ - இதனிடையே இந்த விவகாரம் குறித்து தனது மவுனத்தைக் கலைத்து ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கே கருத்துச் சுதந்திரம் உள்ளது. நையாண்டியை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த நகைச்சுவைக்கலைஞர் ஒருவருக்கு எதிராக பேசுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது போல தெரிகிறது. அவர் என்னைப் பற்றி மட்டும் இல்லை, நமது பிரதமர், உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் சில தொழிலதிபர்களைப் பற்றியும் கேலி செய்துள்ளார். இதைக் கருத்துச் சுதந்திரம் எனக் கூறமுடியாது யாருக்காவோ வேலை செய்வது போல இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
ஹேபிடட் ஸ்டுடியோ மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஷிண்டே, “அந்த நபரும் (குணால்) தனக்கு ஒரு எல்லையை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வினைகள் எதிர்வினைகளை ஏற்படுத்தும்.” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, குணால் கம்ரா பேசிய மும்பையின் ஹேபிடட் ஸ்டுடியோ மீது ஷிண்டேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, அதைச் சேதப்படுத்தினர். இந்த தாக்குதல் தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது மும்மை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன்னிப்பு கேட்கப் போவதில்லை...இதனிடையே, தனது துரோகி என்ற பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள குணால் கம்ரா, “கருத்துச் சுதந்திரம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களை புகழ்வது மட்டுமே என்று சுருங்கி விடக்கூடாது. தனது பேச்சுக்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. எந்த ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கும் போலீஸாருடன் ஒத்துழைக்கத் தயார்.
என்னுடைய நகைச்சுவைக்கு எந்த ஒரு கட்டிடமும் பொறுப்பாக முடியாது. ஒரு நகைச்சுவைப் பேச்சுக்காக கட்டித்தின் மீது தாக்குதல் நடத்துவது என்பது உங்களுக்கு பரிமாறப்பட்ட பட்டர் சிக்கன் பிடிக்கவில்லை என்பதற்காக தக்காளி ஏற்றிச் சென்ற லாரியை கவிழ்பது போல அர்த்தமில்லாதது.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT