ஷாஹி ஜமா மசூதி தலைவரை காவலில் எடுத்தது உ.பி. போலீஸ் - சம்பல் வன்முறை குறித்து விசாரணை
சம்பல்: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் நடந்த 'நவம்பர் 24' வன்முறை வழக்கு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக ஷாஹி ஜமா மசூதி தலைவர் ஜாஃபர் அலியை அம்மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று காவலில் எடுத்தனர்.
ஷாஹி ஜமா மசூதி தலைவர் கைது செய்யப்பட்டாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சம்பல் கோட்வாலி பொறுப்பாளர் அனுஜ் குமார் தோமர், "வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் (ஜாஃபர் அலி) சிறப்பு புலனாய்வு குழுவால் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி ஒரு பழமையான இந்துக் கோயில் மீது கட்டப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் மசூதியைச் சுற்றி சர்ச்சை நிலவி வருகிறது.
கடந்த 2024 நவம்பரில், நீதிமன்றத்தின் உத்தரவின்படி தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் இருந்து இந்நகரில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர்.
நவம்பர் 24 வன்முறையின் 12 வழக்குகளில் 6 வழக்குகளில் சுமார் 4000 பக்கங்களுக்கு மேல் சிறப்பு புலனாய்வுக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன்படி இந்த வழக்குகளில் 159 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
வன்முறை நடந்த மற்றும் பிற இடங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் வன்முறைக்கு பின்பு அந்தப்பகுதியில் வேறு எந்த வன்முறையும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
