‘தேர்தல் ஆணையம் ஒரு தோல்வியடைந்த நிறுவனம்’ - கபில் சிபல் சாடல்

‘தேர்தல் ஆணையம் ஒரு தோல்வியடைந்த நிறுவனம்’ - கபில் சிபல் சாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் ஒரு செயல்படாத மற்றும் தோல்வியுற்ற நிறுவனம் என்று மாநிலங்கள் அவை உறுப்பினர் கபில் சிபல் சாடியுள்ளார். மேலும் தனது அரசியலமைப்பு கடமையை தேர்தல் ஆணையம் நிறைவேற்றாததால், பெருவாரியான மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறும் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், "தேர்தல் ஆணையம் ஒரு செயல்படாத அமைப்பு. அரசியல் அமைப்பின் படி அதனிடம் எதிர்பார்க்கப்படும் கடமைகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தவில்லை. தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியுற்ற நிறுவனமாக இருக்கிறது. நாட்டின் பெருவாரியான மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்.

எனவே இந்தப் பிரச்சினையை நாம் எவ்வளவு விரைவாக கையாளுகிறோமோ அவ்வளவு சீக்கிரம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு நமக்கு அதிகமாகும். இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்கு இயந்திரம் தவிர, தேர்தல் செயல்பாட்டு முறை பாதிக்கப்படிருப்பதை உணர்த்தும் பல தீவிரமான பிரச்சினைகளும் உள்ளன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக்கட்சிகள், வாக்காளர்கள் பட்டியலில், அசாதரணமாக அதிகமான வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல்கள் மற்றும் போலியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் போன்ற முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில் கபில் சிபல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தல் ஆணையம் சனிக்கிழமை, தேர்தல் ஆணையத்தின் 4,000 தேர்தல் பதிவு அலுவலர்களின் பேரவைத் தொகுதிகளில் பூத் வாரியாக தீர்க்கப்படாமல் உள்ள சிக்கல்களை சரி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாநிலங்களில் பல நிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய முடிவுபடி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், வாக்களார் பட்டியலை சரி செய்வதற்கு பிறப்பு இறப்பு பதிவு அலுவலர்களை ஈடுபடுத்தவும் ஆலோசித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in