

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடம் மதுரா. இங்கு புகழ்பெற்ற கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது. இதையொட்டிய நகரமாக பிருந்தாவனத்தில் பழமைவாய்ந்த பாங்கே பிஹாரி கோயில் உள்ளது. இங்கு கிருஷ்ணருக்கு அணிவிக்கும் உடைகளை பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் தயாரிக்கின்றனர்.
இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்துக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி முக்தி சங்கர்ஷ் நியாஸின் தலைவர் தினேஷ் சர்மா எழுதியகடிதத்தில், ‘‘முஸ்லிம் கைவினைஞர்களின் சேவைகளை இந்து கடவுள்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நம் மதத்துக்கான தூய்மையை கவனிப்பவர்களால் மட்டுமே கிருஷ்ணரின் உடைகள் சுத்தமாகத் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய முடியும்’’ என்று கூறியுள்ளார்.
இதுபோல், மேலும் சில இந்துத்துவா அமைப்புகளும் கடிதம் எழுதி உள்ளன. அதில், ‘‘முஸ்லிம்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள். இவர்கள் இந்து மரபுகளை மதிக்காததுடன் பசு பாதுகாப்பையும் கடைபிடிக்காதவர்கள். இதுபோன்றவர்கள் நம் இந்து தெய்வங்களின் உடைகளை தயாரிக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், போராட்டங்கள் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு கோயில் தலைமை சேவகர் ஞானேந்திர கிஷோர் கோஸ்வாமி அனுப்பிய பதில் கடிதங்களில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணருக்கு முஸ்லிம்கள் உடை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது. மத வழிபாடுகளில் நாங்கள் எந்த குறிப்பிட்ட சமூகம் மீதும் பாகுபாடு காட்ட மாட்டோம். மதத்தின் அடிப்படையில் கைவினைஞர்களை மதிப்பிட முடியாது. ஏனெனில், நல்லொழுக்கம் உள்ளவர்களும், பாவம் கொண்டவர்களும் ஒரே குடும்பத்தில் பிறந்ததாக வேதங்களில் குறிப்புகள் உள்ளன.
கம்சன் போன்ற ஒரு பாவி, கிருஷ்ணரின் தாய்வழி தாத்தா உக்ரசேனரின் குடும்பத்தில் பிறந்தார். பிரகலாதனின் வடிவத்தில் ஒரு நாராயண பக்தர் ஹிரண்ய கஷ்யபு போன்ற ஹரியின் எதிரியின் வீட்டில் பிறந்தார். எனவே, நல்லவர்களும் கெட்டவர்களும் எந்த மதத்திலும், பிரிவிலும் அல்லது குடும்பத்திலும் காணப்படலாம்.
மதுரா - பிருந்தாவனத்தில் ஏராளமான முஸ்லிம் கைவினைஞர்கள் தாக்கூர்ஜியின் (கிருஷ்ணர்) கிரீடம் மற்றும் ஆடைகளை உருவாக்குகின்றனர். இதேபோல, காசியில் முஸ்லிம் குடும்பங்கள் சிவபெருமானுக்கு ருத்ராட்ச மாலைகளை உருவாக்குகின்றன. இந்து கடவுள்களின் உடை, கிரீடம் மற்றும் அவற்றில் ஜரி வேலைப்பாடுகளைச் செய்யும் திறமையான கைவினைஞர்களில் சுமார் 80 சதவீதம் பேர் முஸ்லிம்கள். முகலாயப் பேரரசர் அக்பர் ஒரு காலத்தில் கோயிலுடன் தொடர்புடைய மரியாதைக்குரிய துறவியான சுவாமி ஹரிதாஸுக்கு, கிருஷ்ணரை வழிபடுவதற்காக வாசனை திரவியத்தை பரிசளித்தார். இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.