

புதுடெல்லி: ‘‘ஊழல் மற்றும் தவறுகளை மறைக்கவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக நடத்துகிறது. திமுகவின் தவறுகளை கிராமம்தோறும் கொண்டு சென்று வெளிப்படுத்துவோம்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது ஊழல்களையும் தவறுகளையும் மறைக்க, அடிப்படை இல்லாமல் இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்துகிறது. ஆனால், திமுக.வின் குற்றச்சாட்டுக்கு மாறாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய மொழிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டு மக்கள், மக்கள் பிரதிநிதிகள், முதல்வர்களுடன் அவரவர் மொழிகளில் உரையாடுவதற்குப் பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்.
மொழியின் பெயரால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு இதை ஒரு வலுவான செய்தியாக சொல்கிறேன். ஒவ்வொரு இந்திய மொழியும் நமது கலாச்சாரத்தின் ஆபரணமாக விளங்குகிறது. இந்த நிலையில் தெற்கில் உள்ள எந்த மொழியையோ அல்லது ஒரு மாநிலத்தையோ நாங்கள் எதிர்க்கிறோம் என்று அவர்களால் உண்மையிலேயே சொல்ல முடியுமா?
மருத்துவம் மற்றும் பொறியியல் பாடத் திட்டங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், திமுக அரசுக்கு அதற்கான தைரியம் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு வரும் பணம், இத்துடன் தொடர்புடையது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழில் கற்றுத் தருவோம். ஆனால், மொழியின் பெயரால் விஷத்தை பரப்பி வருகின்றனர்.
ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்த ஆங்கிலத்தை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், இந்திய மொழிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை. வளர்ச்சியைப் பற்றி பேசுங்கள். ஆனால் உங்கள் தவறுகளையும் ஊழல்களையும் மறைக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்துகிறீர்கள். உங்களுடைய தவறுகளை தமிழகத்தின் கிராமங்கள்தோறும் எடுத்துச் சென்று அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.