

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இரு மாநிலங்களின் ஆளுநரான நரசிம்மன் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் கிருஷ்ணராவ், தெலங்கானா தலைமைச் செயலாளர் ராஜீவ் சர்மா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நதிநீர் பகிர்வு, மின் பகிர்வு, அரசு ஊழியர்களை மாநிலவாரியாகப் பிரிப்பது, அரசு கட்டிடங்கள், நிறுவனங்களை பாகப் பிரிவினை செய்வது, ஹைதராபாதில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு மாநில முதல்வர்களும் விவாதித்தனர்.இருமாநில அரசுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சந்திப்புக்கு ஆளுநர் நரசிம்மன் ஏற்பாடு செய்திருந்தார்.
சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
இதனிடையே ஒன்றிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஆந்திரத்தைப் பிரிப்பது தொடர்பாக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. அவர்களாகவே முடிவெடுத்து மாநிலத்தைப் பிரித்துவிட்டார்கள். இதனால் ஆந்திர மாநிலத்துக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு தலைநகரைக்கூட தேர்வு செய்யாமல் மாநிலத்தைப் பிரித்துவிட்டார்கள். ஹைதராபாத் போன்ற புதிய தலைநகரத்தை நிர்மாணிக்க ரூ.5 லட்சம் கோடி தேவை. தெலங்கானாவைவிட ஆந்திராவுக்கு வருவாய் குறைவு. தனிநபர் வருமானமும் குறைவு.
ஆந்திராவின் ஆட்சி நிர்வாகத்துக்கு போதுமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. எவ்வித கட்டமைப்பு வசதியும் இல்லை. பெரும் நிதிப் பற்றாக்குறையையும் மாநில அரசு எதிர்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் காங்கிரஸ்தான் காரணம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.