Last Updated : 05 Jul, 2018 12:39 PM

 

Published : 05 Jul 2018 12:39 PM
Last Updated : 05 Jul 2018 12:39 PM

டெல்லியின் மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டை பேருந்துகளிலும் பயன்படுத்தலாம்: கேஜ்ரிவால் அரசு உத்தரவு

டெல்லியின் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யப் பயன்படுத்தப்படும் ‘ஸ்மார்ட் கார்டு’ அட்டையை இனி பேருந்துகளிலும் பயன்படுத்தலாம் என்று அர்விந்த் கேஜ்ரிவால் அரசு உத்தரவிட்டுள்ளது.

மெட்ரோ நகரங்களில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு அதன் பயணச்சீட்டு பெறுவது சற்று கடினமான விஷயம் தான். இதை அனைத்துப் பயணிகளுக்கும் அவர்கள் இறங்குவதற்குள் விநியோகிப்பதும் பேருந்தின் நடத்துநர்களுக்கும் ஒரு சவாலான விஷயமே. இதிலும், அலுவலக நேரங்களில் இருவருக்குமே இது பெரிய பிரச்சனை தான்.

இதைத் தவிர்க்க டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அரசு ஒரு புதிய யோசனை செய்துள்ளது. இதன்படி, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யப் பெறும் அட்டைகளையே பேருந்துகளிலும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதை நேற்று டெல்லி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெல்லோட் அறிவித்தார். ஜூலை 31 முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் முதற்கட்டமாக 250 அரசு நகரப் பேருந்துகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெல்லோட் கூறும்போது, ''எந்த ஒரு அரசும் வசதியையும் பயன்படுத்தும் பொதுமக்களிடம் யோசனை கேட்டு அரசு அதை செயல்படுத்துவது அவசியம். இதை எங்கள் போன்ற மக்கள் அரசால் தான் செய்ய முடியும். இந்தவகையில், மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டுகளை பேருந்துகளிலும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

பேருந்துகளில் ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்துவதற்கான இயந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி மெட்ரோ ரயில்களிலுக்கான ஸ்மார்ட் கார்டால் பயணிகளின் நேரம் மிகவும் மிச்சமாகிறது. இதை இனி பேருந்தில் பயன்படுத்துவதும் நல்ல பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தமுறை பல வெளிநாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு, சிறந்த முறையில் பயன்பட்டுவருவது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x