

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று காலை தனது குடும்பத்தாருடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து, பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி. அன்னதான அறக்கட்டளைக்கு சந்திரபாபு நாயுடு ரூ.44 லட்சத்திற்கான காசோலையை தேவஸ்தான அறங்காவலர் பிஆர். நாயுடுவிடம் வழங்கினார்.
நேற்று காலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் என்பது பல நூறு ஆண்டுகளாக இந்து பக்தர்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்த ஒரு கோயிலாகும். என்னை அலிபிரியில் நடந்த வெடி குண்டு சம்பவத்திலும் ஏழுமலையான் தான் காப்பாற்றினார்.
திருமலையில் புனித தன்மையை சீர்குலைக்கும் நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம். அலிபிரி பைபாஸ் சாலையில் மும்தாஜ் ஹோட்டல் கட்ட வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், இந்துக்கள் அல்லாதவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்ற அனுமதி இல்லை. இது இந்துக்களின் மனநிலையை பாதிக்கும் செயலாகும். 7 மலைகளும் ஏழுமலையானின் சொத்தாகும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.