

பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் நாம் போராடுகிறோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி அவருக்கு சம்பல் மாவட்ட நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியது.
கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான இந்திரா பவன் திறப்பு விழாவில் ராகுல் காந்தி பேசியபோது, பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸும், எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன என்ற வகையி்ல் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி சிம்ரன் குப்தா என்பவர் அளித்த புகாரின்பேரில் எம்.பி/எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செயய்ப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகார வரம்பு இல்லை எனக் கூறி அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இதற்கு எதிராக மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த சம்பல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க கோரி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஏப்ரல் 4-ம் தேதி அவர் நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ இந்த வழக்கு தொடர்பான தனது கருத்தை ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்று தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.