

கேரளாவில் பாஜக தொண்டர் சூரஜ் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் 9 பேர் குற்றவாளிகள் என கண்ணூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் முழப்பிலங்காட்டில் கடந்த 2005, ஆகஸ்ட் 7-ம் தேதி பாஜக தொண்டர் எளம்பிலாய் சூரஜ் (32), மார்க்சிஸ்ட் கட்சியினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் கடந்த 2003-ல் மார்க்சிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த பிறகு இரு தரப்பிலும் விரோதம் வளர்ந்ததால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் வழக்கு விசாரணையின் போது இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கண்ணூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஊடக செயலாளரின் சகோதரர் உட்பட 9 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. ஒருவரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதையடுத்து தண்டனை விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.