டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: அம்பலப்படுத்திய தீ விபத்து; கொலீஜியம் அதிரடி

டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: அம்பலப்படுத்திய தீ விபத்து; கொலீஜியம் அதிரடி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி வர்மா அவர் முன்பு பணிபுரிந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கே மாற்றப்படுகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, நீதிபதி வர்மா டெல்லியில் இல்லாத போது அவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக பல அறைகளில் அதிக அளவில் பணம் இருப்பதை தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்தப் பணத்தை அவர்கள் மீட்டனர்.

நீதிபதியின் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜீயம், நீதிபதி வர்மாவை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. யஷ்வந்த் வர்மா, கடந்த 2021, அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

இருந்த போதிலும் நீதிபதியை இடமாற்றம் செய்வது மட்டும் போதாது, அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கொலிஜீயம் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தால், ஒரு உள்விசாரணை குழுவினை அமைக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கையாள்வதற்கான நடைமுறைகளின் படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புகார் பெறப்பட்ட நீதிபதியிடமிருந்து விளக்கம் கேட்பார். அவரால் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தலைமை நீதிபதிக்கு உடன்பாடு இல்லாத போது, ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய உள்விசாரணைக் குழுவினை அமைக்கலாம். விசாரணைக் குழு என்பது நீதிபதி ஒருவர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான முதல் படியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in