Last Updated : 18 Jul, 2018 04:53 PM

 

Published : 18 Jul 2018 04:53 PM
Last Updated : 18 Jul 2018 04:53 PM

மக்களவையில் கடும் அமளி: ‘என் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் வலதுசாரி அமைப்பினர்’ - மோடி தலையிட சசிதரூர் வலியுறுத்தல்

 கேரளாவில் எனது அலுவலகத்தைத் தாக்கி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் வலது சாரி அமைப்பினர், தேசவிரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் வலியுறுத்தினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசுகையில், ''2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வென்றால், இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்'' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகத்தை ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தி, சசிதரூக்கு மிரட்டல் விடுத்துச் சென்றனர்.

இந்த விவாகரத்தை மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், “ என் அலுவலகத்தின் மீது ஒரு சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் வலதுசாரி அமைப்பினர் எனச் சந்தேகிக்கிறேன். இந்தத் தாக்குதல் என்பது, நாட்டின் பன்முகத்தன்மைக்கும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்.

அதுமட்டுமல்லாமல், சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீதும் ஜார்கண்டில் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். நாம் எப்போதும் கும்பலாக வந்து அராஜகம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது. சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைத்துவிட்டு, தேசவிரோத சக்திமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.

இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் பதிலளித்துப் பேசினார். அவர் பேசுகையில், ''சசிதரூர் அலுவலகம் தாக்கப்பட்ட விஷயம் என்பது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை. இதை இங்கு விவாதிக்க முடியாது. இந்தத் தாக்குதலை மாநிலத்தில் ஆளும் கட்சி நடத்தி இருக்கலாம். வலதுசாரி அமைப்பினர் நடத்தினார்கள் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு'' எனத் தெரிவித்தார்.

இதனால், சசிதரூரும், இடது சாரிக் கட்சியினரும் எழுந்து அமைச்சர் அனந்த குமார் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''சசிதரூர் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் புலனாய்வு முகமைகளையும், அரசையும் தவறான தகவல்கள் மூலம் மத்திய அமைச்சர் வழிநடத்துகிறார். இதில் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை முறைப்படி அறிய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

அப்போது அவைத்தலைவர் இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, ''அவையில் எந்தக்கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு குற்றம்சாட்டக்கூடாது. அதேசமயம், சசிதரூர் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு இந்த அவை வருத்தத்தையும்,கண்டனத்தையும் தெரிவிக்கிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x