

புதுடெல்லி: மகராஷ்டிராவில் தொடரும் அவுரங்கசீப் சர்ச்சையால் மாநிலத்தின் முக்கியக் கோயில்களில் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. சுற்றுலா துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவின் அவுரங்கசீப் பெயரில் அழைக்கப்பட்ட மாவட்டம், அவுரங்காபாத். இது, அவுரங்கசீப் பெயரை அகற்றவேண்டி, சம்பாஜி நகர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. சம்பாஜி நகரின் குலாலாபாத்தில்தான் அவுரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ளது. இது, மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக உள்ளது.
மகராஷ்ராவின் இந்த சம்பாஜிநகருக்கு வரும் சுற்றுலாவாசிகளில் பெரும்பாலோனோர் அவுரங்கசீப் கல்லறைக்கும் வருவது உண்டு. இவர்களில் முஸ்லிம்கள், ஔவுரங்கசீப்பின் கல்லறைக்கு பூக்களிட்டு மரியாதை செய்கின்றனர்.
இந்த சம்பாஜி நகரின் குலாலாபாத் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கியக் கோயில்கள் பல உள்ளன. இதில், கிரிஷ்ணேஷ்வர் ஜோதிர்லிங்கம், பத்ர மாருதி, கிரிஜா தேவி மற்றும் சுலிபஞ்சன் தத் உள்ளிட்ட கோயில் உள்ளன.
அவுரங்கசீப்பின் கல்லறை தொடர்பாக கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. இதன் மீது விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளத்தினர் மார்ச் 17-ல் நடத்திய போராட்டத்தில் நாக்பூரில் வன்முறை மோதல்கள் நடந்தன.
இதுபோன்ற காரணங்களால், அவுரங்கசீப் கல்லறைக்கு அருகிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கோயில்களில் பக்தர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் நிலவும் பதற்றத்தின் விளைவு கோயில்களில் காணப்படுகிறது. இதனால், மகராஷ்டிராவின் இந்து மத வழிபாட்டுத் தலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் துவங்கி உள்ளன.
சம்பாஜிநகரில் அமைந்துள்ள கிரிஷ்ணேஷ்வர் ஜோதிர்லிங்கம், பத்ர மாருதி, கிரிஜா தேவி கோயில் மற்றும் சுலிபஞ்சன் தத் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் பக்தர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் மீது மகராஷ்டிராவிலிருந்து வெளியாகும் தகவல்கள், அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. இதன்படி, வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும் தேவகிரி கோட்டையிலும் மக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கிரிஷ்ணேஷ்வர் கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு சாதாரண நாட்களில், தினமும் 20,000 பக்தர்கள் வழிபாடுகளுக்கு வருகிறார்கள். கிர்ஷ்ணேஷ்வர் கோயிலுக்கு வார இறுதி நாட்களிலும், திங்கட்கிழமைகளிலும், பக்தர்கள் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை தாண்டி விடுகிறது.
இந்த பிரச்சனையில் கோயில் அறங்காவலர் யோகேஷ் டோபரே கூறியதாவது: இங்கு அமைதியின்மை காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 18,000 முதல் 20,000 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்கு வருகை தந்தனர், மேலும் நாக்பூர் கலவரத்துக்குப் பிறகு, எண்ணிக்கை வெறும் 5,000 ஆகக் குறைந்துள்ளது. எனத் தெரிவித்தார். மகராஷ்டிராவில் தனித்துவமாக இருப்பது, சாய்ந்த அனுமன் சிலை கொண்ட பத்ர மாருதி கோயில். மிகவும் பிரபலமான பழங்கால பத்ர மாருதி கோயிலும் தினமும் சுமார் 15,000 பக்தர்கள் அன்றாடம் வருவது உண்டு.
ஆனால் சர்ச்சை காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, அக்கோயில்களைச் சுற்றியுள்ள உள்ளூர் வணிகங்களும் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.
பூஜை பொருட்கள், பூக்கள், பிரசாதம் மற்றும் மத நினைவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் 70 சதவிகிதம் வரை விற்பனையில் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவுரங்கசீப் கல்லறை சர்ச்சை, இப்பகுதியில் சுற்றுலாவையும் பாதித்துள்ளது. எல்லோரா குகைகள், தவுலதாபாத் கோட்டைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் சற்று விலகி இருப்பதாகக் கருதப்படுகிறது.