ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: பால், உர உற்பத்தி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு கால்நடை இனங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் வகை செய்யும் ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்துக்கு ரூ.3,400 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுதவிர, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சந்தைகளை இணைத்தல் மற்றும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட நாடு தழுவிய பால்பொருள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,790 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அசாம் மாநிலம் நம்ருப் நகரில் ரூ.10,601 கோடியில் அம்மோனியா - யூரியா உற்பத்தி ஆலையை நிறுவவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அங்கு ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தயாரிக்கப்படும். இதனால் இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிலை குறையும். யூரியா தட்டுப்பாடு நீங்கும்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க. குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் திட்டம் 2024-25 நிதியாண்டுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in