Published : 19 Mar 2025 05:04 AM
Last Updated : 19 Mar 2025 05:04 AM
அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் தொடர்புடைய அறக்கட்டளை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் (என்ஜிஓக்கள்) அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் (92). இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.61,000 கோடி ஆகும். கடந்த 1993-ம் ஆண்டில் ஓபன் சொசைட்டி பவுண்டேசன்ஸ் (ஓஎஸ்எப்) என்ற அறக்கட்டளையை சோரஸ் உருவாக்கினார். இந்தியா உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓஎஸ்எப் செயல்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளின் அரசியலில் ஓஎஸ்எப் திரைமறைவில் காய்களை நகர்த்துவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஓராண்டில் சுமார் ரூ.12,000 கோடியை ஓசிஎப் வாரியிறைப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு ஓஎஸ்எப் அறக்கட்டளையே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ஆதரவாக ஓஎஸ்எப் செயல்பட்டது. ஆனால் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோரை தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியாவின் சிஏஏ சட்டம் மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு சோரஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். அவரது ஓசிஎப் அறக்கட்டளை இந்திய அரசியலில் திரைமறைவில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த டிசம்பரில் பாஜக தலைமை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. “எப்டிஎல்-ஏபி என்ற அறக்கட்டளையின் துணைத் தலைவராக சோனியா காந்தி பதவி வகிக்கிறார். இந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி வழங்கி வருகிறார். காஷ்மீரை தனி நாடாக எப்டிஎல்-ஏபி அறக்கட்டளை குறிப்பிடுகிறது" என்று பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டதன் பின்னணியிலும் ஜார்ஜ் சோரஸ் இருப்பதாக பாஜக பகிரங்கமாக குற்றம் சாட்டியது. பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா கடந்த டிசம்பரில் கூறும்போது, “ஓசிசிஆர்பி என்ற அமைப்பு வெளியிடும் அறிக்கைகளை சுட்டிக் காட்டியே ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை எழுப்புகிறார். ஓசிசிஆர்பி அமைப்புக்கு அமெரிக்க தொழிலதிபர் சோரஸே நிதியுதவி செய்து வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில் தொழிலதிபர் சோரஸின் ஓபன் சொசைட்டி பவுண்டேசன்ஸ் நிர்வாகிகள் தற்போது வியட்நாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றனர். அவர்களை சந்திக்கவே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்கிறார் என்று பாஜக வட்டாரங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் செயல்படும் ஓபன் சொசைட்டி பவுண்டேசன்ஸ் (ஓசிஎப்) அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பெங்களூருவில் உள்ள ஓசிஎப் அறக்கட்டளை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த 2020-ம் ஆண்டில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பு இந்தியாவில் தனது செயல்பாட்டை நிறுத்தியது. அம்னஸ்டி இன்டர்நேனலுக்கு ஓசிஎப் அறக்கட்டளையே நிதியுதவி வழங்கி வந்தது. அம்னஸ்டி அமைப்பில் பணியாற்றியோர் தற்போது வேறு சில தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கும் ஓசிஎப் அறக்கட்டளைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதன்படி அம்னஸ்டி முன்னாள் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT