Published : 18 Mar 2025 11:12 PM
Last Updated : 18 Mar 2025 11:12 PM

அவுரங்கசீப் சமாதியை இடித்தால் ரூ.21 லட்சம் வெகுமதி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி தலைவர் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் சமாதியை இடித்து அகற்றுபவர்களுக்கு ரூ.21 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவர் தினேஷ் பல்ஹரி அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் அவரங்கசீப் சமாதியை அகற்ற வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு நேற்றுமுன்தினம் அழைப்பு விடுத்திருந்தன. இதில் வன்முறை வெடித்தது. இருப்பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீடு, வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள வலதுசாரி ஆதரவாளரும், ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அமைப்பின் தலைவருமான தினேஷ் பல்ஹரி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

முகலாய மன்னர் அவுரங்கசீப் இந்து கோயில்களை இடித்தவர். இந்து பெண்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டவர். மராட்டிய வீரர்களுக்கு எதிராக கொடுங்குற்றங்களை இழைத்தவர். இவை அனைத்தையும் அண்மையில் ஒரு திரைப்படத்தில் பார்த்து கண்கலங்கி விட்டேன்.

அவுரங்கசீப்பின் சமாதி இந்தியாவில் எந்த நோக்கத்திற்காக உதவுகிறது?. அவரது சமாதி புல்டோசர் கொண்டு அகற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். அவுரங்கசீப்பின் சமாதிக்கு இந்தியாவில் இடமில்லை. அவரது சமாதியை இடித்து அகற்றுபவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் சார்பில் ரூ.21 லட்சம் வெகுமதி வழங்கப்படும். இந்தியாவில் அவரது சமாதியை எங்கும் வைக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு தினேஷ் பல்ஹரி தெரிவித்துள்ளார்.

அவரங்கசீப்பின் சமாதியை அகற்றுவதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அண்மையில் ஆதரவு தெரிவித்தார். இந்தநிலையில், உ.பி. மடாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x