Published : 18 Mar 2025 05:08 AM
Last Updated : 18 Mar 2025 05:08 AM
ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை பல்வேறு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனம், அங்கபிரதட்சனம் உள்ளிட்டவைகளில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்வது தொடர்பான விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆர்ஜித சேவை டிக்கெட்களை குலுக்கல் முறையில் பெற இன்று 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிருஷ்டவசமாக டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரும் 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி அதற்கான டிக்கெட்களை தங்களது செல்போன் வாயிலாகவே பெற்றுக்கொள்ளலாம். இம்மாதம் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஜூன் மாத திருக்கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜூன் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை திருமலையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 21-ம் தேதி காலை 11 மணிக்கு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்களுக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தும். ஜூன் மாதத்தில் அங்கப்பிரதட்சனம் செய்ய விரும்பும் பக்தர்கள், வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு அதற்கான இலவச டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். 22-ம் தேதி காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து 22-ம் தேதி மதியம் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வெளியாக உள்ளது.
ஜூன் மாதம் ரூ.300 சிறப்பு தரிசனத்தின் வாயிலாக ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்களை தேவஸ்தானம் வெளியிடுகிறது. இதே நாள் மதியம் 3 மணிக்கு திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கும் அறைகளுக்காக ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்கள் அனைவரும் தங்களது முன்பதிவுகளை திருப்பதி தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்கிற இணைய தளத்தில் மட்டுமே செய்து கொள்ளுமாறும், மற்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாமெனவும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT