பிஹார் மாணவியின் மருத்துவர் கனவு: உதவி செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி

பிஹார் மாணவியின் மருத்துவர் கனவு: உதவி செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி
Updated on
1 min read

பிஹார் மாணவி ஒருவர் தனது வீட்டில் நிலவும் பாலின பாகுபாடு குறித்து மனம் உடைந்து பேசும் வீடியோ வைரலாகி, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து மருத்துவராக வேண்டும் என்ற அவரது கனவு உயிர் பெற்றுள்ளது.

பிஹாரின் தானாபூரை சேர்ந்த 11-ம் வகுப்பு குஷ்பு குமாரி. இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 399 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இவர் 11-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் சேர விரும்பினார். ஆனால் பெற்றோரின் கட்டாயத்தால் கலைப் பிரிவில் படிப்பதாக அவர் கண்ணீருடன் கூறும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில் குஷ்பு குமாரி, “இன்றுகூட எங்கள் வீட்டில் எனக்கும் என் சகோதரனுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுகிறது. சகோதரர்களுக்கு படிக்க முழு சுதந்திரம் இருக்கிறது, ஆனால் சகோதரிகளுக்கு இல்லை. 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே பிளஸ் 1-ல் அறிவியல் பாடப்பிரிவு எடுக்கலாம் என்று என் அம்மா கூறினார். நான் 399 மதிப்பெண் எடுத்தேன். இதனால் கலைப் பிரிவில் படிக்கிறேன்" என்றார்.

தனது மகளை அறிவியல் பாடப்பிரிவில் சேர்க்காததற்கு குடும்பத்தின் நிதி நெருக்கடியும் ஒரு காரணம் என்று அவரது தந்தை உபேந்திர ராய் கூறியிருந்தார்.

இந்த வீடியோ மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து அம்மாணவி முழு ஆதரவு அளிப்பதாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்தார்.

இதுகுறித்து வீடியோ அழைப்பில் அம்மாணவியிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “பிரதமர் நரேந்திர மோடியும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் உனது கல்விக்கான உதவிகளை செய்வார்கள். உனது பெற்றோர் மீது எந்த வெறுப்பும் வேண்டாம். அவர்கள் உனது படிப்புக்கு தங்களால் இயன்றவரை உதவியுள்ளனர்" என்று கூறினார்.

இதையடுத்து பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சிங் கூறுகையில், “வரும் கல்வி ஆண்டில் அம்மாணவி 11-ம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவில் படிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in