பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி சந்திப்பு

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். படம்: பிடிஐ
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். படம்: பிடிஐ
Updated on
2 min read

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்' என்ற சிந்தனை குழுவின் சார்பில் ஆண்டுதோறும் 'ரைசினா டயலாக்' என்ற உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் 'ரைசினா டயலாக்' உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 3 நாட்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ரஷ்யா, அமெரிக்கா உட்பட 125 நாடுகளை சேர்ந்த வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் என 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்த மாநாட்டில் ரஷ்யா, உக்ரைன் போர், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

'ரைசினா டயலாக்' மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, துளசி கப்பார்ட் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். உளவு தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது, கூட்டு போர் பயிற்சி, ஆயுதங்கள் விநியோகம் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி துளசியிடம், ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதுகுறித்து சட்டப்பூர்வமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று துளசி உறுதி அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியையும் துளசி கப்பார்ட் நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்தியாவை தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது தென்சீனக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அவர் விரிவான ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துளசி கப்பார்ட் யார்? - அமெரிக்க சமோவா பகுதி, துதுய்லா தீவில் கடந்த 1981-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி துளசி கப்பார்ட் பிறந்தார். இவரது தாய் இந்து மதத்தை தழுவினார். தனது குழந்தைகளுக்கு இந்து பெயர்களை சூட்டினார். இதன்படி சிறுவயது முதலே இந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்ட துளசி கப்பார்ட் இன்றுவரை தீவிர இந்துவாக வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் ஜனநாயக கட்சியில் இருந்து விலகி குடியரசு கட்சியில் இணைந்தார். புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியில், அமெரிக்க உளவுத் துறை தலைவராக துளசி கப்பார்ட் பணியாற்றி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in