“இந்தி மொழி கற்பது பயன் தரும்...” - மும்மொழிக் கொள்கைக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

அமராவதி: புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்பது தொடர்பாக தமிழகத்தில் விவாதம் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

“எந்தவொரு மொழியும் வெறுக்கத்தக்கது அல்ல. எங்கள் தாய்மொழி தெலுங்கு. இந்தி தேசிய மொழி. ஆங்கிலம் சர்வதேச மொழி. நமது வாழ்வாதாரத்துக்காக இயன்றவரை பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ஒருபோதும் தாய்மொழியை மறக்கக் கூடாது. இந்தி மாதிரியான தேசிய மொழியை கற்பதன் மூலம் டெல்லி போன்ற தேசத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் போது அங்கு உள்ளவர்களுடன் பேசுவது எளிதாக இருக்கும். இதில் அரசியல் தேவையில்லாதது. பல்வேறு மொழிகளை எப்படி கற்பது என்பது குறித்துதான் சிந்தனை இருக்க வேண்டும்.

தொடர்பியலுக்கு பல்வேறு மொழிகளை கற்க வேண்டியது அவசியம். தாய்மொழியை எளிதில் கற்கலாம். ஏனெனில், அனைத்தும் முதன்மையானது தாய் மொழிதான். தாய் மொழியை கற்று, அதை பெருமையுடன் பேசுபவர்கள் தான் உலக அளவில் உயர் பதவிகளில் உள்ளனர்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணும் மொழி அரசியல் சார்ந்து தனது கருத்தை தெரிவித்தார். அதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினை ஆற்றினர். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தால் தமிழகத்துக்கு சேர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என வலியுறுத்துவது இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in