Last Updated : 19 Jul, 2018 08:27 PM

 

Published : 19 Jul 2018 08:27 PM
Last Updated : 19 Jul 2018 08:27 PM

தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் காரசார வாதம்

பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேறியது.

ஆனால், மத்திய அரசு மீது குற்றம்சாட்டிப் பேசிய எதிர்க்கட்சிகள், குற்றவாளிகளைத் தப்பவிட்டு, அக்கறையாக இந்த மசோதாவை நிறைவேற்றுகிறது என்று காட்டமாகத் தெரிவித்தன.

உள்நாட்டில் வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி உள்ளிட்டோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களின் சொத்துகளை அதிகாரிகளுக்கு முடக்கும் அதிகாரம் அளிக்கும் பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் சட்டத்தை அவசரச் சட்டமாக மத்திய அரசு பிறப்பித்திருந்தது.

அந்த அவசரச் சட்டத்தை மக்களவையில் இன்று, பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் மசோதா என்ற பெயரில் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

ஏறக்குறைய இந்த மசோதா மீது 2 மணிநேரம் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்களான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. பிரமேசந்திரன், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், அதிமுக எம்.பி. வெங்கடேஷ் பாபு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி, பிஜு ஜனதா தளம் எம்.பி. தகதா சத்பதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.வெங்கடேஷ், என்சிபி கட்சி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பியூஷ் கோயல், நிஷிகாந்த் துபே ஆகியோர் பேசினர்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்து அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், ''பொருளாதாரக் குற்றங்கள் செய்து வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் இந்த மசோதா அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு, இப்போது மசோதாவாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கறுப்புப் பணத்துக்கு எதிராகவும், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராகவும் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது.

இதுபோன்ற மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கும் போது ஏன் கொண்டுவரவில்லை? இந்த மசோதா மூலம் அதிகாரிகள் தவறு செய்தவர்களின் சொத்துகளை முடக்குவதோடு, அவர்களின் பினாமியாக செயல்படுபவர்களின் சொத்துகளையும் முடக்கிவைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

அப்போது எழுந்து பேசிய புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. என்.கே. பிரேமசந்திரன், ''பாஜக ஆட்சியில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். இப்போது அக்கறையாக இந்த மசோதாவை நிறைவேற்றுகிறது மத்திய அரசு. இந்த விவகாரத்தில் உண்மையை அறிய நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும், இந்த மசோதாவைத் தீவிரமாக ஆய்வு செய்ய, நிலைக்குழு அனுப்ப வேண்டும். பொருளாதார குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று பேசினார்.

அப்போது பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, மசோதாவை ஆதரித்துப் பேசுகையில், ''பொருளாதாரக் குற்றங்களைச் செய்து தப்பி ஓடியவர்களிடம் இருந்து சொத்துகளை மீட்க இந்த மசோதா துணைபுரியும். மெகுல்சோக்சி, மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் காங்கிரஸ் காலத்தில் வளர்க்கப்பட்டவர்கள். முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், விதிமுறைகளைத் தளர்த்தி பல்வேறு நிறுவனங்கள் கடன பெற உதவியுள்ளார். இதன் மூலம் வங்கிகளின் வாராக்கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்தது. மற்ற நாடுகள் இதுபோன்ற குற்றவாளிகளைப் பிடிக்கச் சட்டம் கொண்டுவந்த நிலையில், காங்கிரஸ் அரசு கொண்டு வரவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் பேசுகையில், ''மத்திய அரசின் பேச்சுக்கும் செயல்பாட்டுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. நிரவ்மோடி தாவோஸ் நகரில் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்தார். தன்னை நாட்டின் காவல்காரர் என்று மோடி பிரகடனப்படுத்தினார். ஆனால், இத்தனை குற்றவாளிகள் தப்பி இருக்கிறார்கள். பெரும்பாலான வாராக்கடன் பாஜக ஆட்சியில் உருவானவையே'' எனக் குற்றம் சாட்டினார்.

அதிமுக எம்.பி. வெங்கடேஷ் பாபு பேசுகையில், ''நிரவ்மோடி, மல்லையா தப்பிச்செல்ல மத்திய அரசு போதுமான நேரம் அளித்தது'' என்று குற்றம் சாட்டினார்.

ஏறக்குறைய 2 மணிநேரம் விவாதங்கள் நடந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவித்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக தம்பிதுரை அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x