உ.பி. காவலர் பணி தேர்வில் 3 சகோதரிகள் தேர்ச்சி

உ.பி. காவலர் பணி தேர்வில் 3 சகோதரிகள் தேர்ச்சி

Published on

உத்தர பிரதேச காவலர் பணிக்கான தேர்வில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உத்தர பிரதேச காவல் துறையில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்டில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 48 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 60,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்த குஷ்பூ, கவிதா, சோனாலி ஆகிய 3 சகோதரிகள் காவலர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து குஷ்பூ கூறியதாவது: எங்களது தாத்தா இந்திரபால் சிங் சவுகான், சுதந்திர போராட்ட வீரர் ஆவார். எனது தந்தைக்கு ஒரு மகனும், நான் உட்பட 3 பெண்களும் உள்ளனர். ஆனால் 3 மகள்களையும், மகன்களை போன்றே அவர் வளர்த்தார். தாத்தா, தந்தையின் வழிகாட்டுதலில் நாட்டுக்காக பணியாற்ற முடிவு செய்தோம். கடந்த 4 ஆண்டுகளாக 3 பேரும் சேர்ந்து கடின பயிற்சிகளை மேற்கொண்டோம்.

தினமும் 10 கி.மீ. சைக்கிள் மிதித்து மைதானத்துக்கு செல்வோம். அங்கு கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வோம். நானும் சோனாலியும் ஓட்டப் பந்தய வீராங்கனைகள். பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறோம். கவிதா, கபடி வீராங்கனை ஆவார்.

எங்களையும் சேர்த்து 60,244 பேர் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். விரைவில் மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதன்பிறகு காவலர் பணியில் சேருவோம். இவ்வாறு குஷ்பூ தெரிவித்தார்.

மூன்று பெண்களின் தந்தை சுவாந்திரா சவுகான் கூறும்போது, “சிறுவயது முதலே எனது மகள்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தது. அதை ஊக்குவித்தேன். இப்போது எனது 3 மகள்களும் ஒரே நேரத்தில் காவலர்களாக பணியில் சேர இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த துறையிலும் பெண்களால் சாதிக்க முடியும். இதற்கு எனது மகள்கள் உதாரணம்" என்று தெரிவித்தார்.

தாய் சாயா தேவி கூறும்போது, “எனது மூத்த மகள் குஷ்பூவுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. அதன் பிறகும் அவர் கடினமாக உழைத்து காவல் துறையில் இணைந்து உள்ளார். எனது மகன் பிரின்ஸ் கல்லூரியில் படித்து வருகிறார். அவரையும் காவல் துறையில் சேர்க்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in