மோடி தலைமையில் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வடகிழக்கு மாநிலங்கள்: அமித் ஷா பெருமிதம்

மோடி தலைமையில் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வடகிழக்கு மாநிலங்கள்: அமித் ஷா பெருமிதம்
Updated on
1 min read

குவாஹத்தி: “பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் கிளர்ச்சி, வன்முறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அசாமின் கோக்ராஜரில் அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் (ஏபிஎஸ்யூ) 57-வது ஆண்டு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மார்ச் 16) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அமித் ஷா தனது உரையில், "இன்று, போடோலாந்து முழுவதும் அதன் தலைவர் உபேந்திர நாத் பிரம்மா காட்டிய பாதையைப் பின்பற்றும் நிலையில் டெல்லியில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு போடோபா உபேந்திர நாத் பிரம்மா மார்க் என்று பெயரிட அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லியில் உபேந்திர நாத் பிரம்மாவின் மார்பளவு சிலை திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும். போடோபா உபேந்திரநாத் பிரம்மா-வின் ஒவ்வொரு கனவையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், அசாம் அரசும் நனவாக்கும்.

2020 ஜனவரி 27-ல் போடோலாந்து பிராந்திய (பி.டி.ஆர்) அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதை கேலி செய்தன. ஆனால், இன்று மத்திய அரசும், அசாம் அரசும் இந்த ஒப்பந்தத்தில் 82 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளன. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தின் 100 சதவீதத்தை மத்திய அரசு செயல்படுத்தும். போடோலாந்தில் அமைதியின்மை, குழப்பம், பிரிவினைவாதம் குறித்து விவாதங்கள் ஒரு காலத்தில் இருந்தன. ஆனால் இப்போது கல்வி, வளர்ச்சி, தொழில்துறை ஆகியவை மீது கவனம் திரும்பியுள்ளது.

போடோலாந்தின் மக்கள் தொகை 3.5 மில்லியன் மட்டுமே என்றாலும், மத்திய அரசும் அசாம் அரசும் இதன் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடியை ஒதுக்கியுள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், போடோ மொழி அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் தோட்டாக்கள் முழங்கிய இடத்தில் இன்று போடோ இளைஞர்கள் தங்கள் கைகளில் மூவர்ணக் கொடியை அசைக்கிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, பேரவைத் தலைவர் பிஸ்வஜித் டைமரி, மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in