Published : 14 Mar 2025 03:06 PM
Last Updated : 14 Mar 2025 03:06 PM

மகாராஷ்டிராவில் மும்பை - அமராவதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது லாரி மோதி விபத்து

மும்பை: மகாராஷ்டிராவின் பூசாவல் மற்றும் பத்னேரா இடையே பூசாவல் பிரிவில் உள்ள போட்வாட் ரயில் நிலையம் அருகே மும்பை - அமராவதி விரைவு ரயில் மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மூடப்பட்ட ரயில்வே கேட்டை லாரி கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்வப்னில் நிலா கூறுகையில், "இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது. அந்த லாரி நீண்ட நாட்களுக்கு முன்பே மூடப்பட்ட ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது ரயில் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் விபத்தினால் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியான வீடியோ பதிவில், ரயில் மோதி லாரி இரண்டாக பிளந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதன் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதையும், லாரியின் முன்பகுதி ரயில் இன்ஜினில் சிக்கியிருப்பதையும் பார்க்க முடிகிறது. என்றாலும், இந்த விபத்தில் ரயில் இன்ஜினுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் "அந்த ரயில்வே கிராசிங் நீண்ட காலத்துக்கு முன்பே மூடப்பட்டு, மேம்பாலம் கட்டப்பட்டு மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இந்த விபத்தில், மேல்நிலை மின் கம்பிகள் உட்பட ரயில்வேயின் சில உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகளின் நடவடிக்கையால் காலை 8.30 மணிக்கு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x