விண்வெளியில் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு: இஸ்ரோ சாதனை

விண்வெளியில் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு: இஸ்ரோ சாதனை
Updated on
1 min read

விண்வெளியில் வலம்வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை (UnDocking) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விண்ணில் பாரதிய அந்தரிக்‌ஷா ஸ்டேஷன் (பிஏஎஸ்) எனும் ஆய்வு நிலையத்தை வரும் 2035-ம் ஆண்டுக்குள் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

இதற்காக தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி ஆகிய இரட்டை விண்கலன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன. இந்த 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அதன்பிறகு, அந்த விண்கலன்கள் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம்வந்தன. அவற்றுக்கு இடையே உள்ள தூரத்தை படிப்படியாக குறைத்து, ஜனவரி 16-ம் தேதி 2 விண்கலன்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்மூலம் ‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு எனும் பெருமையை பெற்று இந்தியா சாதனை படைத்தது.

இதையடுத்து, இரட்டை விண்கலன்கள் இடையே மின் எரிபொருள் பரிமாற்றம், விண்கலன்களை பிரித்தல் (Undock) ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பிறகு, இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக நேற்று விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று விடுவிக்கப்படும் நிகழ்வின் காணொலி மற்றும் படங்களும் வெளியாகின. இது அறிவியல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகளிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அறிவியல், தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது சமூக வலைதள பதிவில், ‘இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள். இது ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் கடினமான விடுவித்தல் பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளன. பாரதிய அந்தரிக்‌ஷா நிலையம், சந்திரயான்-4, ககன்யான் உட்பட நமது எதிர்கால திட்டப் பணிகளை சுமுகமாக நடத்துவதற்கு இது உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், விண்கலன்கள் இடையே மின் எரிபொருள் பரிமாற்றம் தொடர்பான பரிசோதனை குறித்து அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. வரும் நாட்களில் மீண்டும் விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மின் எரிபொருள் பரிமாற்றம் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in