Published : 13 Mar 2025 12:56 AM
Last Updated : 13 Mar 2025 12:56 AM
அமராவதி: தொகுதி மறுவரையறையால் ஆந்திராவில் 75 கூடுதல் பேரவை தொகுதிகள் ஏற்படும். அந்த 75 தொகுதிகளும் பெண்களுக்காக ஒதுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அமராவதியில் நடைபெற்று வரும் பட்ஜெட் பேரவை கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கலந்து கொண்டார். அப்போது மகளிர் நலன் குறித்து அவர் பேசியதாவது:
என்னுடைய ஆட்சியில் எந்த ஒரு நல திட்டங்களை அமல் படுத்தினாலும் அதில் பெண்களின் நலன் முன்னிறுத்தப்படும். நாங்கள் பெண்களின் வளர்ச்சி குறித்து பேச மாட்டோம். செயலில் காட்டுவோம். தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் பங்கு கொடுக்க அரசாணை பிறப்பித்தவர் என்டி. ராமாராவ். ஆனால், தனது தாய்க்கும், தங்கைக்கும் கூட சொத்தில் பங்கு கொடுக்காதவர் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
அப்படியே கொடுத்த சொத்தை கூட பிடுங்கி கொள்ள நீதிமன்றத்தை ஜெகன்மோகன் ரெட்டி நாடி உள்ளார். எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் வேலை வாய்ப்பு மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் நன்றாக படித்து, நல்ல வேலைகளை தேடி, நன்றாக சம்பாதித்து வருகின்றனர். ஆதலால், பெண் பிள்ளைகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெண் சிசுக்கள் பிறந்தால் அவர்களின் பெயரில் ரூ.5 ஆயிரம் வங்கியில் டெபாசிட் செய்தோம். பெண்களுக்கு மஞ்சள், குங்குமத்தின் கீழ் 9,689 பேருக்கு தலா ரு.10 ஆயிரம் அரசு சார்பில் வழங்கினோம். தீபம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கி வருகிறோம். மகளிர் சுய உதவி குழுக்களின் உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் 50 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்தோம். ஆந்திராவின் தலைநகர் அமராவதியை உருவாக்க 34 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இது பெண்களால்தான் சாத்தியமானது இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சால், ஆந்திராவில் தொகுதி மறுவரையறையால் 75 சட்டப்பேரவை தொகுதிகள் அதிகரிக்க கூடும் என்பது தெரியவந்துள்ளது. அப்படி பார்த்தால் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 6 சட்டப்பேரவை தொகுதிகள் என்றால், மக்கள் தொகை அடிப்படையில் ஏறக்குறைய 12 பாராளுமன்ற தொகுதிகள் ஆந்திராவில் அதிகரிக்கலாம். ஆந்திராவில் பெண்களுக்காக 33 சதவீத இட ஒதுக்கீட்டின் படி 75 பேரவை தொகுதிகளில் கூடுதலாக பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT