Last Updated : 12 Mar, 2025 05:57 AM

3  

Published : 12 Mar 2025 05:57 AM
Last Updated : 12 Mar 2025 05:57 AM

இந்துக்களால் வெற்றி பெற்றேன்; முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை: அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் கருத்து

இந்துக்களால் வென்றேன், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மதக்கலவரங்கள் அதிகமாக நடந்த நகரங்களில் முக்கியமானது அலிகர். மத்திய அரசின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. இந்நகரில் முஸ்லிம்கள் சுமார் 40 சதவீதம் உள்ளனர்.

இந்நிலையில் அலிகர் பல்கலையில் ஹோலி கொண்டாடுவதில் எழுந்த சர்ச்சை குறித்து அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அவர் அந்த அறிக்கையில், “இந்துக்களின் வாக்குகளால்தான் நான் அலிகரில் மூன்றாவது முறை எம்பியானேன். இதுபோல் நான்காவது முறையாக எம்பி ஆவேன். முஸ்லிம்களின் வாக்குகளை நான் பெறுவதில்லை. எனக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் இந்துக்களின் அனைத்து பண்டிகைகளும் இனி கொண்டாடப்படும். ஹோலி பண்டிகைக்கு துவக்கத்தில் மறுப்பு தெரிவித்தவர்கள் இப்போது அனுமதி அளித்துள்ளனர். பல்கலைக்கழகம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். மாணவர்கள் இங்கிருந்து கல்வி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டுமே தவிர, யாரும் கலவரங்களை உருவாக்க கூடாது.

பல்கலை வளாகத்தினுள் ஈத், பக்ரீத்துடன் ஹோலி, தீபாவளியையும் கொண்டாடுங்கள். 2014-ம் ஆண்டுக்கு பிறகு ராஜா மகேந்திர பிரதாப்பின் கருத்தரங்கு வளாகத்தில் நடைபெறுகிறது. ஏனெனில், மகேந்திர ராஜா பிரதாப், அலிகர் முஸ்லிம் பல்கலை அமைய தனது நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் எந்த பண்டிகையையும் ஆடம்பரமாகக் கொண்டாடுவதில் இனி எந்தப் பிரச்சினையும் இருக்காது" என்று கூறியுள்ளார்.

இதுபோல், உ.பி.யின் பலியா தொகுதி பாஜக எம்எல்ஏ கேத்கி சிங்கும் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "இந்துக்களின் ஹோலி, ராம்நவமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை எழுகிறது. இந்த பிரச்சினைகள் நம் இந்துக்களுடன் இணைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கும்போதும் வரும் வாய்ப்புள்ளது. இதற்காக அவர்களுக்கு தனிப்பிரிவுகள் உருவாக்க முதல்வர் யோகி உத்தரவிட வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x