அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம்: கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி

அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம்: கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி

Published on

புதுடெல்லி: டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

டெல்லியில் 2019-ல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது துவாரகா முழுவதும் பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இதற்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங், துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோருடன் இணைந்து அரசு நிதியை அப்போதைய முதல்வர் கேஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. எனினும் புகார் தொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை 2022
செப்டம்பரில் பெருநகர மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். இதற்கு எதிராக டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜனவரியில் ரத்து செய்தது. மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சிறப்பு நீதிபதி விஷால் காக்னே பிறப்பித்த உத்தரவில், “குற்றச்சாட்டு விசாரணைக்கு உரியதா என்பதை கீழமை நீதிமன்றம் கண்டறிய முயற்சிக்கவில்லை’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)-ன் கீழ் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பெருநகரமாஜிஸ்திரேட், அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய நேற்று அனுமதி வழங்கினார். மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் மார்ச் 18-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in