ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவர் கைது; விசாரணை வளையத்தில் ஐபிஎஸ் தந்தை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவர் கைது; விசாரணை வளையத்தில் ஐபிஎஸ் தந்தை
Updated on
1 min read

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வந்த விவகாரத்தில் தருண் ராஜு என்பவரை கைது செய்துள்ளனர் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள். அவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல். அவர் பிரபல ஹோட்டல் அதிபரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ரன்யா ராவ் போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் என்பதால், விமான நிலையத்தில் ஏதேனும் விதிமுறை மீறல் நடந்ததா என்பதை விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில், 5 நாட்களில் அவரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் தருணுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வர ரன்யா ராவுக்கு தருண் ராஜு உதவி உள்ளார் என தகவல்.

குறிப்பாக துபாயில் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது ரன்யா ராவிடம் தங்கத்தை வாங்கி கொடுத்தது அவர்தான் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அது குறித்து தான் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரும் நடிகை ரன்யா ராவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் தான் அவர் மீது தற்போது விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

விமான நிலையத்தில் விதிமுறை மீறல்: தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரன்யா ராவ், கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். அதனால் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஏதேனும் விதிமுறை மீறல் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க தொடங்கி உள்ளது கர்நாடக அரசு.

அப்படி ஏதேனும் இருந்தால் அதில் போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவுக்கு தொடர்பு உள்ளதா என்பதை இந்த விசாரணை மூலம் உறுதி ஆகும் என கர்நாடக அரசு நம்புகிறது. விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் காவல்துறையினரின் ஈடுபாட்டை கண்டறிய இரண்டு தனித்தனி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பின்னணி என்ன? - கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32) தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது, 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்ய‍ப்பட்டார். பெங்களூருவில் உள்ள‌ ரன்யா ராவின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தற்போது ரன்யா ராவ் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in