Published : 11 Mar 2025 05:14 AM
Last Updated : 11 Mar 2025 05:14 AM

தெலங்கானா சட்டமேலவை தேர்தல்: காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயசாந்தி மனு தாக்கல்

தெலங்கானா சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை விஜயசாந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டமேலவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

தெலங்கானாவில் காலியாக உள்ள 5 எம்எல்சி பதவிகளில் மூன்றில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், ஒன்றில் அதன் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. எஞ்சிய ஒரு பதவிக்கு எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் காங்கிரஸ் சார்பில் தயாகர், சங்கர் நாயக் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு விஜயசாந்தி கூறுகையில், "எனக்கு பதவி வேண்டும் என்று நான் எப்போதும் கட்சி மேலிடத்தில் கேட்டதில்லை. கட்சியில் கஷ்டப்பட்டு உழைத்தால் பதவிகள் தானாக வரும். அதுவரை நமக்கு பொறுமை அவசியம்” என்றார்.

ஆந்திராவில்... ஆந்திராவில் காலியாக உள்ள 5 மேலவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 பதவிகளையும் ஆளும் தெலுங்கு தேசம் கூட்டணியே கைப்பற்ற வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பி.டி.நாயுடு, ரவிசந்திர யாதவ், காவலி க்ருஷ்மா ஆகிய 3 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாஜக சார்பில் சோம வீர்ராஜு மனு தாக்கல் செய்தார். ஜனசேனா கட்சி சார்பில் துணை முதல்வர் பவன் கல்யாணின் சகோதரரும், நடிகருமான நாகபாபு ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x