Published : 11 Mar 2025 05:07 AM
Last Updated : 11 Mar 2025 05:07 AM
புதுடெல்லி: “நாட்டில் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளது குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டம் நேற்று தொடங்கியது. மக்களவை காலை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறும்போது, “நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முரண்பாடுகள் இருந்துள்ளன. இதுகுறித்து மக்களவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறுகின்றன” என்று வலியுறுத்தினார்.
பின்னர் அவர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியில் வந்ததும், “வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதம் நடக்குமா?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் பதில் அளிக்கையில், “நான் அப்படி நினைக்கவில்லை” என்றார். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சுகதா ராய் பேசும்போது, “வாக்காளர் அடையாள அட்டை எண் ஹரியானாவில் இருக்கும் பலருக்கும் மேற்கு வங்கத்தில் இருக்கும் பலருக்கும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதுபோல் ஒரே எண் 2 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இருப்பது, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்லை பாதிக்கும். எனவே, வாக்காளர் பட்டியல் முரண்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையம் மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பேசும்போது, “தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் சேர்ந்து போலி வாக்காளர் பட்டியலை தயாரித்து வருகின்றன. மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லியில் இதேபோல் வாக்காளர் பட்டியலில் முரண்பாடு காணப்படுகிறது. இது நேர்மையான தேர்தலை சீர்குலைக்கும். இது அரசியல் சர்வாதிகாரத்துக்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள், கொல்கத்தாவில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தனர். வாக்காளர் பட்டியலை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். தனித்துவமான அடையாள அட்டைகளுக்கு தனித்தனி எண் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
முன்னதாக கடந்த 2-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்தது. அதில், “2 எண்கள் 2 மாநிலங்களில் ஒன்று போல் இருந்தாலும், சம்பந்தப்பட்ட வாக்காளர் அவருக்கான மாநிலம், தொகுதி, வாக்குச் சாவடியில்தான் வாக்களிக்க முடியும். ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த அடையாள அட்டையை வைத்து வேறு மாநிலத்தில் வாக்களிக்க முடியாது. எனினும், இதுபோன்ற முரண்பாடுகளை நீக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்குவதற்காக, எரோநெட் இணையதளத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT