

புதிய வருமான வரி மசோதா வரி செலுத்துவோரின் இணையதள தனி உரிமையை மீறவில்லை என ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1961-ல் இயற்றப்பட்ட வருமான வரி மசோதாவுக்கு பதில் புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது வரி செலுத்துவோர் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மசோதாவின் 247-வது பிரிவு, வரி செலுத்துபவர்களின் கணினி அல்லது டிஜிட்டல் வழியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை, ரகசிய குறியீட்டை உடைத்து சோதனையிட வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வகை செய்கிறது.
இந்நிலையில், புதிய மசோதாவில் வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகளின் ரகசிய குறியீட்டை உடைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி இருப்பது ஒரு நபரின் தனி உரிமையை மீறும் செயல் என சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தும்போது, கணினி அல்லது டிஜிட்டல் வழியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை ஆய்வு செய்ய இப்போது நடைமுறையில் உள்ள சட்டத்திலேயே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், வரி ஏய்ப்புக்கான முகாந்திர அடிப்படையில் நடைபெறும் சோதனையின்போது மட்டுமே இந்த அதிகாரம் பயன்படுத்தப்படும். குறிப்பாக, சோதனையின்போது மின்னஞ்சல், கிளவுடு, வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட தொலைத்தொடர்பு தளங்களின் ரகசிய குறியீட்டை தெரிவிக்க மறுத்தால் மட்டுமே அவை உடைக்கப்படும். வரி செலுத்தும் அனைவரின் இணையதள தனி உரிமையை மீறும் நோக்கம் இந்த மசோதாவில் இல்லை” என்றார்.