தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
Updated on
1 min read

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவை, பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்தபோது, 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்ய‍ப்பட்டார். பெங்களூருவில் உள்ள‌ ரன்யா ராவின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.

ரன்யா ராவ் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், 45 நாடுகளுக்கு பயணித்தது தெரியவந்த‌து. துபாய்க்கு மட்டும் 27 முறை சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரன்யா ராவ் பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு தங்கம் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சில பெரிய நகை கடை அதிபர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.

ரன்யா ராவ் மீது சர்வதேச அளவில் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுடன் இணைந்து விசாரிக்க சிபிஐ முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் உள்ள வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் வேலையில் சிபிஐ அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், 3 நாள் காவல் முடிவடைந்ததை அடுத்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in