Published : 09 Mar 2025 03:57 PM
Last Updated : 09 Mar 2025 03:57 PM

''வரி விதிப்பு பற்றி உலகமே பேசும்படி செய்துவிட்டார் ட்ரம்ப்'' - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப்படம்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரி விதிப்பு பற்றி உலகமே பேசும்படி செய்துவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வரி விதிப்பு பற்றி உலகமே பேசும்படி செய்துவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். எல்லா வீடுகளிலும் பேசும் ஒரு விஷயமாக வரி விதிப்பு மாறிவிட்டது. கடந்த 1910-ன் நடுப்பகுதி வரை அமெரிக்க அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக வரிகளே இருந்தன. கடந்த 1913-ல் அமெரிக்க அரசியல் அமைப்பு திருத்தப்பட்டு முதல் முறையாக ஒரு மத்திய வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மத்திய வருமான வரியை ஆதரித்து பிரச்சாரம் செய்த செல்வாக்கு மிக்க பொருளாதார வல்லுநர்களில் ஒருவர், கொலம்பியா பல்கலைக்கழக பொதுநிதிப் பேராசிரியர் எட்வின் செலிக்மேன். பொருளாதாரத்தைப் பொருத்தவரை எட்வின் செலிக்மேன், டாக்டர். பி.ஆர்.அம்பேத்கரின் வழிகாட்டியாக இருந்தார். அம்பேத்கர் கொலம்பியாவில் பட்டம் பெற்று திரும்பிய பின்பும் நீண்ட காலம் தங்களுக்குள் அன்பான உறவினை கொண்டிருந்தனர்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதித்ததை எடுத்துக் கூறியதால், வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்தக் கூற்று குறித்து பிரதமர் மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் தனது பதிவொன்றில், "அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த இந்திய வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்காவின் வாஷிங்டன் சென்றுள்ளார். இதனிடையே, அதிபர் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மோடி அரசு எதனைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது? இந்திய விவசாயிகள் மற்றும் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியின் நலன்கள் சமரசம் செய்யப்படுகின்றனவா? மார்ச் 10ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் தொடங்கும் போது பிரதமர் மோடி இவை குறித்து நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

நீ வரி விதிக்கிறாய் நானும் வரி விதிக்கிறேன் என்பது சர்வதேச வர்த்தகம் செயல்படும் விதமல்ல. இந்த விதிகள் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. விடிஒ என்பது உலக வர்த்தக அமைப்பே தவிர, அது உலக ட்ரம்ப் அமைப்பு இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x