Published : 09 Mar 2025 06:22 AM
Last Updated : 09 Mar 2025 06:22 AM

திருமணத்துக்கு முன்பு தெளிவு ஏற்படுத்த 9 மாநிலங்களில் 21 ஆலோசனை மையம்: தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியது

புதுடெல்லி: டெல்லி உட்பட 9 மாநிலங்களில் 21 ஆலோசனை மையங்களை தேசிய மகளிர் ஆணையம் தொடங்கி உள்ளது.

திருமணத்துக்குப் பிறகு கணவன் - மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள், விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டெல்லி உட்பட 9 மாநிலங்களில் 21 ஆலோசனை மையங்களை தேசிய மகளிர் ஆணையம் தொடங்கி உள்ளது.

இந்த மையங்களில் மையங்களில் திருமணத்துக்கு முன்பு தேவையான தகவல்கள் மற்றும் சமூக, உளவியல் மற்றும் நடத்தை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த ஆலோசனை மையங்கள் மாவட்ட ஆட்சியர், நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் செயல்படும்.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் நேற்று கூறியதாவது: திருமணம் செய்து கொள்ளும் புது தம்பதிகளுக்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க இந்த மையங்கள் திறக்கப்படுகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் நாடு முழுவதும் மாவட்டந்தோறும் இது போல் பால் ஆலோசனை மையங்கள் திறக்க தேசிய மகளிர் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த மையங்களை திருமணப் பதிவு அலுவலகங்களுக்கு அருகில் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்பது குறித்து இளம் தலைமுறையினருக்கு இந்த மையங்கள் வழிகாட்டியாக இருக்கும்.

நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசித்தோம். அவர்கள் அளித்த பல்வேறு பரிந்துரைகளின்படி இந்த மையங்களை தொடங்கி உள்ளோம். புதுமண தம்பதிகளுக்கு எந்தெந்த வகையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பதையும் கண்டறிந்துள்ளோம். அதற்கேற்ப இந்த மையங்களில் அவர்களுக்கு உதவிகள் செய்யப்படும். இவ்வாறு விஜயா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x